
மலாக்கா, செப் 9 – தமது புரோடுவா விவா காரைப் பழுதுபார்ப்பதற்கு 2,000 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட் வரை செலவான போதிலும் பட்டறை உரிமையாளர் ஷேய்க் முகமது மக்டாட் ஹாருன் தம்மிடம் ஒரு ரிங்கிட்டை மட்டுமே அடையாளமாகப் பெற்றுக்கொண்ட தாராள குணத்தினால் மாற்று திறானாளியான ராஜேந்திர குமார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இன்றைய உலகில் அதுவும் வாகனப் பட்டறையை நடத்துவோர் பரந்த மனம் படைத்தவர்களாக இருப்பது அபூர்வம். ஆனால் ஷேய்க் முகமதுவின் பரந்த மற்றும் தாராள குணத்தினால் அவருக்கு நன்றி சொல்வதற்கு வார்த்தையில்லையென ராஜேந்திர குமார் தெரிவித்தார். மலாக்காவில் மக்டாட் ஒர்க்க்ஷோப் கார் பழுதுபார்க்கும் பட்டறையின் உரிமையாளரான 49 வயதுடைய ஷேய்க் முகமது மக்டாட் ஹாருன் தமக்கு பெருந்தன்மையோடு உதவியது குறித்து ராஜேந்திர குமார் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.
59 வயதுடைய ராஜேந்திர குமார் 12 ஆண்டுகளுக்கு முன் தாம் வாங்கியிருந்த காரின் இயந்திரம் பழுதடைந்ததால் அதனைப் பழுதுபார்ப்பதற்கு 2,000 முதல் 3,000 ரிங்கிட் தேவைப்பட்டது. ஜாசின் ஞாலஸில் உள்ள ஒரு தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தபோது கால் முறிந்ததால் கடந்து ஆண்டு நவம்பர் மாதம் முதல் ராஜேந்திர குமார் வேலையில்லாமல் இருந்தார். இந்த நிலையில்தான் தாம் நண்பர் ஒருவரின் உதவியோடு மக்டாட் ஒர்க்க்ஷோப் சென்றதாக ரஜேந்திர குமார் தெரிவித்தார்.
தமது நிலையை அறிந்து தமது கார் பழுதுபார்ப்பதற்குத் தேவையான அனைத்து உபரி பாகங்களையும் சொந்தமாக வாங்கி, தமது காரையும் பழுதுபார்த்துக் கொடுத்த அவருக்கு தாம் எப்போதும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளதாக செங் முதியாராவைச் சேர்ந்த ராஜேந்திர குமார் நன்றிப் பெருக்கோடு தெரிவித்தார்.