கோலாலம்பூர், ஆகஸ்ட் -19 – கோலாலம்பூரில் வாடகைக்கு விட்ட கடை வீட்டில், தோட்டா துளைக்காத எஃகு கதவு பொருத்தப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் வீட்டின் உரிமையாளர் ஒருவர்.
கட்டுமான குத்தகையாளர் எனக் கூறி வந்தவரிடம் வாடகைக்கு விட்ட இரண்டே மாதங்களில் 7 அங்குல தடிமானத்தில் அக்கதவும், அதன் மேலே CCTV கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் என்ன விஷேசம் என்றால், அக்கதவில் வெளியில் யார் வந்திருக்கிறார்கள் என்பதை உள்ளிருந்தே கவனிக்கும் வசதியும் உண்டு.
இவ்வளவு நேர்த்தியாகத் திட்டமிட்டு அம்மாற்றங்களைச் செய்ததற்கான காரணமும் தற்போது அம்பலமாகியுள்ளது.
அதாவது, கடந்த 2 மாதங்களாக சட்டவிரோதமாக பிட்காயின் (bitcoin) நாணயங்களைத் தயாரிக்கும் கூடமாக அது செயல்பட்டு வந்துள்ளது.
பிட்காயினை உருவாக்கும் செயல்முறை இயந்திரங்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
வாடகைக்கு இருந்தவர் மின்சார மீட்டரையும் மாற்றியமைத்துள்ளார்.
பெரிய இட வசதி என்பதால் 1,200 ரிங்கிட் வாடகைக்கு விட வேண்டிய வீட்டை, 850 ரிங்கிட்டுக்கு கொடுத்தேன்.
ஆனால், இரண்டே மாதங்களில் இப்படி ஆகி விட்டதென மொஹமட் அஸ்ருல் (Mohamad Asrul) என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட 47 வயது உரிமையாளர் ஏமாற்றத்துடன் கூறினார்.
ஆரம்பத்தில் அவருக்கும் சந்தேகம் எதுவும் வரவில்லை.
ஆனால், மீட்டரில் ஏதோ குழப்பம் நடக்கிறது, மின்சார பயன்பாடும் வழக்கத்திற்கு மாறாக எகிறுகிறதென TNB-யிடமிருந்து அழைப்பு வந்த போதே சந்தேகம் வலுத்து அவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.
போலீசில் புகார் செய்துள்ள அஸ்ருல் மேல் நடவடிக்கையாகக் காத்திருக்கிறார்.