கோலாலம்பூர், நவம்பர்-22 – கோலாலாம்பூரில் PPR எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்டங்களில் குடியிருப்போரில் சிலர், பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் 124 ரிங்கிட் மாத வாடகையைச் செலுத்த மறுக்கின்றனர்.
சம்பந்தப்பட்டோர் விரைந்து வாடகை பாக்கியைச் செலுத்தி விட வேண்டும்; நாங்கள் வந்து வீட்டுக் கதவைத் தட்டும் அளவுக்கு வைத்துக் கொள்ள வேண்டாமென, கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL எச்சரித்துள்ளது.
இல்லையேல் டிசம்பர் தொடங்கி கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக வேண்டும்.
வாடகைச் செலுத்தாமல் இழுத்தடிக்கும் வீடுகளுக்கான தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுவதோடு, வாடகை ஒப்பந்தமும் முறித்துக் கொள்ளப்படுமென DBKL அறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்தது.
இவ்வளவு மலிவான PPR வீடுகளில் வாடகைக்கு இருக்க ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வரிசையில் காத்திருக்கின்றனர்.
அவர்களுக்கும் நாங்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டுமென DBKL சுட்டிக் காட்டியது.
எனவே அங்கிருக்க வீடு கிடைத்தவர்கள் உண்மையில் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
PPR வீடுகள் சலுகையாகும், உங்களின் உரிமை அல்ல என DBKL நினைவுறுத்தியது.