
கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 21 – புக்கிட் பிந்தாங்கில், Kunafa பலகாரத்தை பெற, வாடிக்கையாளர் ஒருவரை ஜோகிட் ஆட சொன்ன, அங்காடி வியாபார முகப்பை உடனடியாக மூட DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டது.
அதோடு, முறையான அனுமதி இன்றி, அரபு இனிப்பு பலகாரங்களை விற்பனை செய்து வந்த அந்த வியாபார முகப்பிற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கடையில் பதார்த்தங்களை வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள், ஜோகிட் நடனம் ஆடும் காணொளிகள் வைரலானதை தொடர்ந்து, பரவலாக கண்டனம் எழுந்தது.
முன்னதாக, சோதனை வாயிலாக, முறையான அனுமதி இன்றி அந்த வியாபார மையம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதோடு, வேலை அனுமதி இல்லாத அந்நிய நாட்டவர்கள் அங்கு பணிப்புரிந்து வந்ததும் தெரிய வந்ததால், அம்மையம் உடனடியாக மூடப்பட்டதாக, கோலாலம்பூர் மாநகர் மையம் தெரிவித்துள்ளது.