
சென்னை , பிப் 5 – இந்திய திரையுலகில் 10,000த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பிரபல பின்னணி பாடகி பத்ம பூஷன் வாணி ஜெயராம் காலமானதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் திராளாக வந்து அஞ்சலி செலுத்தினர். வாணி ஜெயராமின் இசை பணிகளை கௌரவிக்கும் வகையில் காவல் துறை மரியாதை செலுத்த வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இன்று காலை வாணி ஜெயராமின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தியி பின்னர் ஸ்டாலின் இதனை தெரவித்தார். பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொள்ளாமலேயே வாணி ஜெயராம் மறைந்தது கவலைளிப்பதாகவும் நேற்று திடீர் மரணம் அடைந்த வாணி ஜெயராமின் மறைவு இசையுலகிற்கு பெரிய இழப்பு என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக கவர்னர் ஆர்.என் ரவி, மற்றும் மேலும் பல அரசியல்வாதிகளும் வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள், நடிகைகள் , இசையமைப்பாளர்கள் டிரம்ஸ் கலைஞர் சிவமணி, பாடகி சித்ரா, மனோபாலா, இசை அமைப்பாளர்கள் தினா. சங்கர் கணேஷ், ஒய்.ஜி மகேந்திரன் உட்பட திரையுலக கலைஞர்கள் மற்றும் பொதுமக்களும் வாணி ஜெயராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வாணி ஜெயராம் திருமணத்திற்கு பிறகு வாரிசுகள் இல்லாததால் கணவர் ஜெயராம் மறைவுக்குப் பிறகு அவரது சகோதரி மட்டுமே துணையாக இருந்து வந்தார். அவரது சகோதரி குடும்பத்தினரின் ஏற்பாட்டில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பொதுமக்கள் , திரையுலக கலைஞர்களின் அஞ்சலி செலுத்திய பின்னர் வாணி ஜெயராமின் உடல் இன்று பிற்பகலில் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு காவல் துறையின் மரியாதைக்குப் பின் தகனம் செய்யப்பட்டது.