கோலாலம்பூர், நவம்பர்-20 – மருத்துவமனை வார்ட்டுகளில் வேலை செய்யும் தாதியர்கள், SSPA எனும் பொதுச் சேவைத் துறை ஊதிய முறையின் கீழ் வாரத்திற்கு 3 மணி நேரங்கள் கூடுதலாக பணிபுரிய வேண்டுமென்ற புதிய உத்தரவு, பல தரப்பிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பில் வாரத்திற்கு 42 மணி நேரங்கள் வேலை செய்யும் தாதியர்கள், டிசம்பர் 1 முதல் 45 மணி நேரங்கள் வேலை செய்ய வேண்டுமென அவ்வுத்தரவு சொல்கிறது.
வாரத்திற்கு 45 மணி நேர வேலையென்பது, 5 நாட்களுக்கு காலை 8 முதல் மாலை 5 மணி வரை அலுவலகங்களில் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கே பொருத்தமானதாக இருக்கும்.
ஷிஃவ்ட் முறையில் அதுவும் சுகாதாரச் சேவை, பாதுகாப்பு போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு அது நியாயமாக இருக்காது என்கிறார் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர்.அருணாசலம்.
அவர்கள் ஆண்டு முழவதும் வேலை செய்பவர்கள்; அவர்களின் வேலை நேரமும் பணிச் சூழலும், அலுவலக நேரத்தைக் கொண்டவர்களுடன் வித்தியாசப்படுகிறது.
குறிப்பாக இரவு நேர வேலையால் உடலளவிலும் மனதளவிலும் அவர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை ஒப்பிட முடியாது என, பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான Dr லிங்கேஷ் சுட்டிக் காட்டினார்.
அவசரங்கள் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நடக்கின்றன; இதனால் கண்விழித்திருக்கும் தாதியர்களுக்கு, அவர்கள் இழந்த தூக்கத்தை ஈடுகட்ட மறுநாள் வழங்கப்படும் ஓய்வு போதுமானதாக இல்லை.
தவிர, தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் தாதியர்களுக்கு ஷிஃவ்ட் அலவன்ஸ் தொகை வழங்கப்படுவதில்லை.
நோயாளிகளைப் பராமரிக்க வேண்டியிருப்பதால், சில நேரங்களில் ஓய்வெடுக்கக் கூட நேரம் இருப்பதில்லை; சாப்பிடுவதைக் கூட அவசர அவசரமாகத்தான் செய்ய வேண்டியுள்ளது.
எனவே, இந்த 3 மணி நேர கூடுதல் நேர வேலை உத்தரவை JPA மறுபரிசீலனை செய்து, ஷிஃவ்ட் ஊழியர்களுக்கு நியாயமாக நடந்துகொள்ள வேண்டுமென Dr லிங்கேஷ் வலியுறுத்தினார்.