கோலாலம்பூர், ஆக 6- அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மலேசியர்களின் வாழ்க்கை செலவினத்தை குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். வாழ்க்கை செலவினங்களை குறைப்பதற்கான விவகாரத்தில் கவனம் செலுத்தும்படி கொள்கை திட்டமிடுபவர்களை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
சீனி, எண்ணெய்,மாவு மற்றும் சமையல் எண்ணெய் விலை இன்னமும் குறைவாக இருந்தாலும் அதிக விலையேற்றத்தினால் மலேசியர்கள் தொடர்ந்து சுமையை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவேதான் இந்த வரவு செலவு திட்டத்தில் வாழ்க்கை செலவினத்தை குறைப்பது குறித்து ஏற்கனவே நாங்கள் விவாதித்துள்ளோம். உரம், விதைகள் உட்பட பல்வேறு பொருட்களின் விலைகளை திட்டமிட்டு உயர்த்தும் கும்பலினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என அன்வார் கூறினார்.