
புத்ரா ஜெயா, நவ 27- இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற வாழ்க்கை செலவின சிறப்பு கூட்டம் மீதான நடவடிக்கை மன்றத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றார். மக்களை பாதிக்கும் வாழ்கை செலவினம் குறித்து விவாதிக்கும் அந்த கூட்டத்தில் அரசாங்கத்துறைகள் மற்றும் நிறுவனங்களும் கலந்துகொண்டன. அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ Mohamad Zuki Ali , பேங்க் நெகாரா மலேசியாவின் கவர்னர் டான்ஸ்ரீ நோர் சம்சியா முகமட் யூனுஸ், புள்ளி விவரத்துறை, உள்நாடு வர்த்தக பயனீட்டாளர் விவகார அமைச்சு, நிதியமைச்சு, விவசாய மற்றும் உணவு தொழில்துறை அமைச்சு, எரிபொருள், இயற்கை வளங்கள் அமைச்சின் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதிகரித்திருக்கும் வாழ்க்கை செலவின பிரச்சனை தொடர்பாக உடனடி கூட்டம் நடத்தப்படும் என நேற்று அன்வார் அறிவித்திருந்தார். பிரச்சனை தீர்ப்பதற்காக உடனடியாக குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கை திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.