
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 5 – ஒவ்வொரு வாரமும் குறைந்தது 20 இலங்கை பிரஜைகள், விசா விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய காரணத்திற்காக மலேசியாவில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்து பின்னர் வேலைக்குச் சேர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் மாட்டிக் கொள்வதாக தகவல் கூறுகின்றது.
சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைவோரை, மலேசிய குடிநுழைவுத் துறை மிக அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. ஆனால் இலங்கை பிரஜைகள், சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வந்து, பின்னர் முகவர்களின் பேச்சை நம்பி வேலைக்குச் சேர்வதால் அதிகாரிகளிடம் சிக்கி, மலேசியாவிலிருந்து வெளியேற்றப்படுவதாக Daily Mirror தகவல் வெளியிட்டுள்ளது.
அவ்வாறு வேலைகொடுக்கப்படும் இலங்கை பிரஜைகளுக்கு மனிதாபிமானமே இல்லாமல் மிகக் குறைவான சம்பளமும் கடினமான வேலைகளும் கொடுக்கப்படுவதாக அது கூறியது.
இதன் தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கையின் ஆட்கடத்தலுக்கு எதிரான பணிக்குழு, வெளிநாடுகளில் வேலை தேடும் இலங்கை பிரஜைகள், சரியான, சட்டப்பூர்வமான வழிகளைப் பின்பற்றும்படி ஆலோசனை கூறியுள்ளது. அதோடு, தாங்கள் வேலை செய்யப் போகும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே வெளிநாட்டு வேலைப் பிரிவிடம் தெரியப் படுத்தும்படியும் அக்குழு, இலங்கை மக்களைக் கேட்டுக் கொண்டது.