கோலாலம்பூர், செப்டம்பர் -2, கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வில் அன்புத் தாய் விஜயலட்சுமியைப் பறிகொடுத்த மகன் சூர்யாவும் கணவர் மாத்தையாவும் கனத்த இதயத்தோடு தாயகம் புறப்பட்டனர்.
புறப்படுவதற்கு முன், சம்பவ இடத்தில் சிறிய அளவில் சமயச் சடங்குகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
எண்ணெய் விளக்கு கொளுத்தி, மணி அடித்து வழிபடும் காட்சிகள் ஆஸ்ட்ரோ அவாணி வெளியிட்ட வீடியோவில் காண முடிந்தது.
உடன் விஜயலட்சுமியின் இளைய சகோதரியும் இருந்தார்.
தாயின் நினைவாக, சில கைப்பிடி மண்ணை பிளாஸ்டிக் பையில் போட்டு சூர்யா எடுத்துச் சென்றதும் கண்களை குளமாக்கின.
ஆந்திரா, குப்பத்தைச் சேர்ந்த 48 வயது விஜயலட்சுமியும் அவரின் குடும்பத்தாரும் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடந்துச் செல்லும் போது திடீரென நிலம் உள்வாங்கியதில், 8 மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்து அவர் காணாமல் போனார்.
அவரைத் தேடி மீட்க தீயணைப்பு மீட்புத் துறை கடும் போராட்டம் நடத்தியும் பலன் கிடைக்காததால், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் 9 நாட்களுக்குப் பிறகு அப்பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், விஜயலட்சுமியை இறைவனிடத்தில் இளைப்பாற வைத்து விட்டு, குடும்பத்தார் சொல்லொணாத் துயரத்தில் நாடு திரும்பியுள்ளனர்.