கோலாலம்பூர், நவ 4 – இன்று விடியற்காலையில் கோலாலம்பூர், ஜாலான் சைட் புத்ரா – ஜாலான் சுல்தான் முகமட் (Jalan Syed Putra – Jalan Sultan Mohamed ) சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் கார் ஓட்டுனர் ஒருவர் காயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து காலை மணி 5.32 அளவில் அவசர அழைப்பை பெற்றதாக தீயணைப்பு நிலையத்தின் முதிர் நிலை நடவடிக்கை அதிகாரி சே முகமட் சோலேஹூடின் சே ஜூசோ (Che Mohd Solehuddin Che Jusoh ) தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஜாலான் ஹங் துவா மற்றும் புடு தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 15 உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு ஹோன்டா சிட்டி கார் ஒன்று கவிழ்ந்து கிடப்பதை கண்டதோடு அதன் உள்ளே சிக்கிக்கொண்ட ஓட்டுனரை சிறப்பு கருவிகளை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். கையில் முறிவு ஏற்பட்ட கார் ஓட்டுனர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சே முகமட் தெரிவித்தார்.