வாஷிங்டன், செப்டம்பர் -14, அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்தவாறே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கவிருக்கிறார்.
சுனிதாவும், அவரின் சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் (Butch Wilmor) இணையம் வாயிலாக வாக்களிக்க, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அமெரிக்க குடிமகள் என்ற முறையில் எங்கிருந்தாலும் ஜனநாயகக் கடமையாற்றுவது முக்கியமெனக் கூறிய சுனிதா, விண்வெளியிலிருந்து தேர்தலில் வாக்களிப்பது புதுமையான அனுபவமாக இருக்கப் போவதாகச் சொன்னார்.
நாசா ஏற்பாட்டில், விண்வெளியில் இருந்து இணையம் வாயிலாகப் பேசிய போது சுனிதாவும், வில்மோரும் அவ்வாறு கூறினர்.
Star Liner விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 3 மாதங்களாக அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதாவும் வில்மோரும், Space X நிறுவனத்தின் விண்கலத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் பூமி திரும்புகின்றனர்.
நவம்பர் 5 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்புக்கும், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரீஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.