வாஷிங்டன், டிசம்பர்-26 – அனைத்துலக விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சக வீரர்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
அதில் சுனிதா சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கும் நிலையில், உடனிருக்கும் 3 சகாக்கள் கிறிஸ்மஸ் தாத்தா தொப்பிகளை அணிந்திருந்தனர்.
எனினும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சமூக ஊடகங்களில் வெளியான அவ்வீடியோவால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
வெறும் 6 நாள் பயணமாக விண்வெளி சென்றவர்களிடம், 6 மாதங்களுக்குப் பிறகு வரப்போகும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான அலங்காரங்கள் எப்படி வந்தன? அல்லது விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருப்போம் என்பது அவர்களுக்கு முன்பே தெரியுமா? என்பன போன்ற பல கேள்விகளை வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வலைத்தளவாசிகளின் ஐயங்களுக்கு நாசா விளக்கமளித்துள்ளது.
அதாவது, நவம்பர் மாதம் விண்வெளி பயணமான Space X விண்கலத்தில் வைத்தே, கிறிஸ்மஸ் மரம் உள்ளிட்ட அலங்காரப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கிறிஸ்மஸ் சிறப்பு உணவான வான்கோழி, உருளைக் கிழங்குகள், காய்கறிகள், கேக்குகள், பிஸ்கட்டுகளும் உடனிருந்தன.
மற்றபடி வழக்கமான சில அறிவியல் பொருட்களும் Space X-சில் கொண்டுச் செல்லப்பட்டன.
அனைத்துலக விண்வெளி நிலையம் ஒவ்வோர் ஆண்டும் பல முறை பொருட்களால் நிரப்பப்படுவதாகக் கூறி, கிறிஸ்மஸ் அலங்கார சர்ச்சைக்கு நாசா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஒரு வாரப் பயணமாக ஜூன் 5-ம் தேதி சுனிதாவும் புட்ச் வில்மோரும் (Butch Wilmore) விண்வெளி சென்ற Star Liner விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், இருவரும் மாதக் கணக்கில் விண்வெளியிலேயே தங்கியுள்ளனர்.
மாற்று விண்கலத்தில் அடுத்தாண்டு மார்ச்சில் தான் அவர்கள் பூமி திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.