
கோலாலம்பூர், மார்ச் 28 – UUM – வட மலேசிய பல்கலைக்கழக மாணவி எஸ். வினோசினி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீஸ் கூறியிருக்கும் நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் மர்மமாகவே இருப்பதாக, அந்த மாணவியின் குடும்பத்தாரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஏனெனில், ஆகக் கடைசியாக எரிசக்தி ஆணையம் அனுப்பிய கடிதத்தில், அந்த மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கியதற்கான எந்த கூறுகளும் இல்லையென குறிப்பிட்டிருப்பதாக, வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார்.
இவ்வாறு இருக்கையில், போலீசும் UUM- மும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் பொதுமக்களையும் மாணவி வினோசினி மின்சாரம் தாக்கி இறந்தார் என ஏன் நம்ப வைத்ததாக அவர் கேள்வி எழுப்பினார்.
அதோடு, குடும்பத்தாருக்கு தெரியாமல் நடத்தப்பட்ட அந்த மாணவியின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறியும் நீதிமன்ற விசாரணைக்கான ஆவணங்களை, போலிசும், அரசாங்க வழக்கறிஞர் தரப்பும் வெளிப்படுத்தாமல் இருப்பது தங்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
அந்த வகையில், போலிசும், UUM – மும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இவ்விவகாரத்தில் நீதி கிடைப்பதில் முட்டுக் கட்டையாக இருப்பதாக மனோகரன் குறிப்பிட்டார்.