கோலாலம்பூர், மார்ச் 1 – கடந்த ஞாயிற்றுக்கிழமை சுல்தான் இஸ்கண்டார் ( Sultan Iskandar ) நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில், இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழக்கக் காரணமாக இருந்த நான்கு சக்கர வாகனமோட்டி, போதைப் பொருள் உட்கொண்டிருக்கவில்லை என கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க விசாரணை துறையின் தலைவர் சரிஃபூடின் மொஹம்மட் சாலே ( Sarifudin Mohd Salleh) தெரிவித்தார்.
சம்பவத்தின் போது டோயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) காரை ஓட்டிய 27 வயது மதிக்கத்தக்க நபர் மீது நேற்று மாலை சிறுநீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த சோதனையில், அவர் போதைப் பொருளை உட்கொண்டிருக்காதது உறுதிப்படுத்தப்பட்டதாக சரிஃபூடின் மொஹம்மட் சாலே கூறினார்.
அந்த ஓட்டுநரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
எனினும் விபத்தில் காயமடைந்த அந்த ஓட்டுநர் முதுகெலும்பில் ஏற்பட்டிருக்கும் காயத்தினால் சிறப்பு மருத்துவ அங்கியை அணிந்திருப்பதால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என சரிஃபூடின் மொஹம்மட் சாலே தெரிவித்தார்.