ஜோகூர் பாரு, மார்ச் 8 – முக்கிய பிரமுகர்கள் பயணித்த வாகனங்களுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காகவே , எதிரே வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை, பணியில் இருந்த இரு போலீஸ் அதிகாரிகள் சற்று நேரம் நிறுத்தியதாக , வட ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ரூபியா அப்துல் வாஹிட் ( Rupiah Abd Wahid ) தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்ட 46 வினாடிகள் கொண்ட காணொளி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் அதிகம் வலம் வரத் தொடங்கியதை அடுத்து , அதன் தொடர்பில் ரூபியா அப்துல் வாஹிட் கருத்துரைத்தார்.
சம்பவத்தின் போது அந்த போலீஸ் அதிகாரிகள், ஜோகூர் பாரு, Plaza Angsana- வில் நடைபெற்ற மலேசிய குடும்பம் தொடர்பான நிகழ்ச்சியை முன்னிட்டு, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முக்கிய பிரமுகர்கள் இருந்த வாகனம் ஏற்கனவே முக்கிய சாலைக்குள் நுழைந்து விட்டதால், சம்பதப்பட்ட அம்புலன்ஸ் 30 வினாடிகளுக்கு மட்டுமே நிறுத்தப்பட்டதாக ரூபியா அப்துல் வாஹிட் தெரிவித்தார்.
இதனிடையே அந்த சம்பவம் தொடர்பில், உண்மையற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், அதன் தொடர்பீல் தொடர்பு பல்லூடக சட்டத்தின் கீழ் போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.