
சிபு, செப்டம்பர் 7 – விமான பயணத்தின் போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, சரவாக் மாநில கல்வி, புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு துணையமைச்சரும், இருதய நோய் நிபுணருமான டாக்டர் அனுவார் ரபே, அவசர சிகிச்சை வழங்கிய சம்பவம், பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.
நங்கா சட்டமன்ற உறுப்பினரும், PBB – பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான அனுவார், நேற்று, கூச்சிங்கிலிருந்து, மாஸ்சின் MH2521 விமானம் வாயிலாக கோலாலம்பூர் பயணமான போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
நடு வானில், விமானத்தில் மருத்துவர் யாரேனும் உள்ளனரா என கேட்டு விமான பணிப்பெண் ஒருவர் செய்த அறிவிப்பை ஏற்று உடனடியாக உதவிக்கரம் நீட்டினார் அவர்.
“ஆஸ்துமான காரணமாக மூச்சு திணறலுக்கு இலக்கான பெண் ஒருவருக்கு, இன்ஹேலர் அல்லது நெபுலைசர் கருவி தேவைப்பட்டது. அதிர்ஷ்டவடமாக அவ்விமானத்தில் பயணித்த மற்றொரு பயணியிடம் இன்ஹேலர் இருந்தது” என அனுவார் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஹென்ஹேலர் பயன்படுத்திய பின்னரும் மூச்சு விடுவதில் அந்த பெண்ணுக்கு சிரமம் இருந்தது. எனினும், மாஸ் விமானத்தில் இருந்த, மருத்துவ அவசர பொருட்களில் வைக்கப்பட்டிருந்த நெபுலைசரைப் பயன்படுத்தி பின்னர் அவரது நிலைமை சரி செய்யப்பட்டது.
விமானத்தில், அதுபோன்ற மருத்துவ உதவிச் சாதங்களை வைத்திருக்கும் மாஸ் நிர்வாகத்தையும், அனுவார் அந்த பதிவில் பாராட்டியுள்ளார்.
அந்த பதிவு வைரலாகியுள்ளதோடு, இணையவாசிகள் தொடர்ந்து அனுவாரை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.