
பேங்கோக், செப்டம்பர் 18 – பேங்கோக் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள், தங்கள் எடையை நிறுத்த பின்னரே இனி விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி அந்த நிபந்தனை அமலுக்கு வருவதாக, பேங்கோக் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும், அவ்வாறு திரட்டப்படும் பயணிகளின் உடல் எடை உட்பட அனைத்து தரவுகளும் இரகசியமாக வைக்கப்படுமென அந்நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
அனைத்துலக சிவில் ஏவியேஷன் அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப, விமானத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அந்நடவடிக்கை அமல்படுத்தப்படுவதாக, பேங்கோக் ஏர்வேஸ் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
குறிப்பாக, விமானம் புறப்படும் போது அதன் மொத்த எடையை கணக்கிட உதவுவதே அதன் நோக்கமாகும்.
அதனால், விமானத்தில் ஏறுவதற்கு முன், அதன் நுழைவாயிலில் பயணிகளின் எடை நிறுக்கப்படும். அதற்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
பேங்கோக், சுவர்ணபூமி விமான நிலையத்தைத் தளமாக கொண்டு செயல்படும் பேங்கோக் ஏர்வேஸ் நிறுவனம், உள்நாட்டு பயணங்கள் உட்பட கம்போடியா, ஹாங் கோங், லாவோஸ், மாலத்தீவு, மியன்மார், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சேவைகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது.