சிங்கப்பூர், ஏப்ரல்-28, ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் சாய்வு இருக்கைகள் வேலை செய்யவில்லை என புகார் அளித்த இரண்டு பயணிகளுக்கு, இழப்பீடாக 200,000 இந்திய ரூபாய் அதாவது 3,300 சிங்கப்பூர் டாலரையும், பிற செலவுத் தொகையையும் வழங்குமாறு Singapore Airlines (SIA) உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ரவி குப்தா, கடந்தாண்டு மே 23 அன்று தனது மனைவியுடன் வணிக வகுப்பில் பயணம் செய்த போது, அவர்களின் இருக்கைகள் மின்னணு முறையில் சாய்ந்திருக்கவில்லை.
இதனால் தங்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டதாகவும், விமான டிக்கெட்டுகளுக்காக மொத்தம் 133,500 ரூபாய் செலுத்திய போதிலும் கிட்டத்தட்ட 4 மணி நேர விமானப் பயணம் முழுவதும் விழித்திருக்க வேண்டியிருந்தாகவும் அவர் புகார் செய்திருந்தார்.
அதனை விசாரித்த ஹைதராபாத்தில் உள்ள மாவட்ட பயனீட்டாளர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஆணையம், அத்தம்பதியருக்கு SIA, 97,500 ரூபாயைத் திருப்பித் தருமாறு உத்தரவிட்டது.
மேலும் புகார் தேதியிலிருந்து 12 சதவீத வட்டிக் கட்டணமும் செலுத்த வேண்டும் என அவ்விமான நிறுவனம் பணிக்கப்பட்டது.
அவர்களின் மன உளைச்சல் மற்றும் உடல் அசௌகரியத்துக்கு 1 லட்சம் ரூபாயும், புகார் செலவுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் செலுத்துமாறும் SIA உத்தரவிடப்பட்டது.
அவர்களுக்கு SIA செலுத்த வேண்டிய மொத்த தொகை மலேசிய ரிங்கிட்டுக்கு 12,500 ஆகும்.
தனது பதில் மனுவில், அத்தம்பதிக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு, அது ஒரு தொழில்நுட்ப கோளாறு என்றும் SIA விளக்கியது.
என்றாலும் பயணம் நெடுகிலும், அத்தம்பதிக்குத் தேவைப்படும் போதெல்லாம் manual முறையில் இருக்கை சாய்வை வழங்க தாங்கள் முன்வந்ததையும் SIA சுட்டிக் காட்டியது.
இந்நிலையில் அத்தம்பதிக்கு இழப்பீடு வழங்குவதா அல்லது அது குறித்து மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து SIA தகவலேதும் தெரிவிக்கவில்லை.