கோலாலம்பூர், மே 2 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், தனது இரு பயணப் பைகள் காணாமல் போனதால் பரிதவித்துப் போன நோர்லிசா எனும் பெண் ஒருவர், சமூக ஊடகம் வாயிலாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தோனேசியா, ஜகார்த்தாவிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த நோர்லிசாவும் அவரது குடும்பத்தாரும் ஏப்ரல் 28-ஆம் தேதி கோலாலம்பூருக்கு திரும்பியுள்ளனர்.
முதலில் அவர்கள் பயணிக்க இருந்த விமானம், ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து, ஏப்ரல் 28-ஆம் தேதி, மாலை மணி 6.50-க்கு புறப்பட அட்டவணையிடப்பட்டிருந்தது.
எனினும், போதுமான பயணிகள் இல்லாததால், அந்த விமானம் இரவு மணி 8.10-க்கு தான் கிளம்பியுள்ளது.
அதோடு, நோர்லிசாவும் அவரது குடும்பத்தாரும் கொண்டு வந்த எட்டு பயணப் பைகளில் இரண்டு, கூடுதல் எடையில் இருந்ததாக புகார் எழவே, விமானத்தில் அவை, கூடுதல் எடை கொண்ட பொருட்கள் வைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நோர்லிசாவிடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு மணி 11.20 வாக்கில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த நோர்லிசா, இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தனது இரு பயணப் பைகளில் ஒன்றை மீட்டுள்ளார்.
எனினும், அந்த பயணப் பையுடன் சேர்த்து, அதில் இருந்த அவரது பொருட்கள் அனைத்தும் முற்றாக சேதமடைந்திருந்ததாக நோர்லிசா பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பையை எவ்வளவு தேடியும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில், நேரடியாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும், நோர்லிசா புகார் செய்து விட்ட போதிலும் இதுவரை பதில் எதுவும் வரவில்லை என அவர் கூறியுள்ளார்.
பயணப் பையை காணவில்லை என, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் பணியாளர்களிடம் நேரடியாக புகார் செய்த நோர்லிசாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது.
சம்பந்தப்பட்ட பணியாளர்கள், நோர்லிசாவை திட்டி தீர்த்ததுடன், பயணப் பைகளை தேட அவருக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை. அதனால் பின்னிரவு மணி மூன்று வரையில் விமான நிலையத்தில் காத்திருந்த நோர்லிசா குடும்பத்தார் மன உளைச்சலுக்கு இலக்கானதாகவும் கூறப்படுறது.