
கிள்ளான், ஆகஸ்ட்டு 18 – ஷா ஆலாம், எல்மினா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கும்.
குறிப்பாக, உயிரிழந்தவர்களின் உடல்களை நிர்வகிப்பது, அவர்களின் குடும்பத்தாருக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தருவது ஆகியவை அடங்குமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின், நிரந்தர வேலை இல்லாத குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான இதர உதவிகளும் கண்டறியப்பட்டு வருவதாக பிரதமர் சொன்னார்.
அதே சமயம், உடல்களை அடையாளம் காண்பது, மரபணு பரிசோதனை ஆகியவையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றாரவர்.
சிலாங்கூர், கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சென்று சந்தித்த பின்னர் பிரதமர் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக, நண்பகல் மணி 12.55 வாக்கில் மருத்துவமனை சென்றடைந்த பிரதமரை, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாயிட் ஹமிடி, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி, பஹாங் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில், தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸருடின் ஹுசைன் ஆகியோர் வரவேற்றனர்.