
அதிகரித்து வரும் வெப்ப நிலைக்கு மத்தியில், நாட்டின் மின் அமைப்பு சீராக இயங்குவதை உறுதிச் செய்ய, வியட்நாம் தலைநகர் ஹனோயில், தெரு விளக்குகள் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது.
அதீத வெப்பத்தால், தென்கிழக்காசியாவின் சில பகுதிகளில் குளிர்சாதனத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் மின்சாரத்திற்கான தேவையும் உயர்ந்துள்ளதால், அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, இம்மாதம் அதீத வெப்பம் தாக்கக்கூடுமென அந்நாட்டு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாலும், அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, இரவு 11 மணிக்கு மேல், சுற்றுலாவுக்கு பிரபலமான ஹனோய் நகரிலுள்ள, மூன்றில் இரண்டு பகுதி தெரு விளக்குகள் அணைக்கப்படுகின்றன. அதனால், பூங்காக்களும், பொது இடங்களும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
இதனிடையே, வியட்நாமின் வட மற்றும் மத்திய பகுதிகளில் வரலாறு காணாத அதீத வெப்ப நிலை பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
சில இடங்களில் தட்ப வெப்ப நிலை 44.1 பாகை செல்சியல் வரை பதிவாகி வருகிறது.