
கோலாலம்பூர், செப் 18 – திருமணம், பிறந்தநாள், என எவ்வித விருந்து உபசரிப்பாக இருந்தாலும், மீதமாகும் உணவை வீணடிக்காமல் பொட்டலமிட்டு எடுத்துச் செல்ல விருந்தினர்கள் ஊக்குவிக்கப்படுவது இயல்பாகும். ஆனால், விருந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே உணவை பொட்டலமிட்டுக் கொடுங்கள் நான் எடுத்துச் செல்கிறேன் என கூறுவது நியாயமா? அதுவும் வீட்டிலிருந்து உணவு பொட்டலமிடும் பாத்திரத்தை தானே எடுத்து வந்து அதில் உணவை நிரப்பிக் கொடுங்கள் என கேட்பது கொஞ்சமாவது அடுக்குமா ?
இப்படி ஒரு செயலை செய்து வலைத்தளவாசிகளை கோபத்தின் உச்சிக்கு தள்ளியுள்ளார் பெண்மணி ஒருவர்.
அண்மையில் காலை வேளையில் நடந்த விருந்து உபசரிப்பு ஒன்றில் கலந்துக் கொண்ட அப்பெண்மணி, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, உணவு கேட்டரிங் சேவை செய்பவரிடம் சென்று தான் கொண்டு வந்த பாத்திரத்தையும் கொடுத்து, அதில் உணவை போட்டு தர கேட்டுள்ளார். உணவு பறிமாறும் சேவையில் ஈடுபட்ட ஊழியர்களோ, நிகழ்ச்சி இன்னும் தொடங்கவில்லை நாங்கள் அப்படி செய்ய முடியாது என பல முறை சொல்லியும், அந்தப் பெண் மீண்டும் மீண்டும் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.
விருந்தை ஏற்பாடு செய்தவர்கள் பணம் கட்டியிருப்பார்கள், எனவே நான் உணவை எடுத்துக் கொள்கிறேன் என அப்பெண் கூறியுள்ளார்.
இச்சம்பவம் எங்கு எப்போது நிகழ்ந்தது என தெரியவில்லை. ஆனால் இக்காணொளி வைரலாகி வலைத்தளவாசிகளின் கண்டனத்தை பெற்று வருகிறது.