Latestமலேசியா

விரைவிலேயே பெட்ரோல் – டீசல் விலை உயர்வா? வெளிநாட்டு நாளிதழின் செய்திக்கு மலேசியா மறுப்பு

புத்ராஜெயா, மே-5, எரிபொருள் மற்றும் டீசல் விலை உயர்வை அறிவிக்க அரசாங்கம் முடிவுச் செய்திருப்பதாக அண்டை நாட்டு செய்தி ஊடகமொன்றில் வெளியாகியுள்ள தகவலை, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அவ்விவகாரத்தை அமைச்சரவை இதுவரை விவாதித்ததே இல்லை; கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் கூட அது பற்றி பேசப்படவில்லை.

இப்படி இருக்க, மலேசிய அரசாங்கத்தை முந்திக் கொண்டு அப்படியொருச் செய்தி சம்பந்தப்பட்ட ஊடகத்துக்கு எங்கிருந்துக் கிடைத்தது என்பது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக, மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபாஹ்மி கூறினார்.

எனவே, உறுதிச் செய்யப்படாத தகவல்களை வெளியிடும் போக்கை, அனைத்து ஊடகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நம்பத்தகுந்த வட்டாரங்கள் என யார் யாரையோ மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டால் இப்படித் தான் குழப்பத்தில் வந்து முடியும் என அமைச்சர் நினைவுறுத்தினார்.

மலேசிய அரசாங்கம், அடுத்த மாதம் தொடங்கி எரிபொருளுக்கான உதவித் தொகையைக் குறைக்கப் போவதாகவும், தொடக்கக் கட்டமாக டீசலின் விலை சந்தை விலைக்கேற்ப மிதக்க விடப்படும் என்றும் சிங்கப்பூரின் The Straits Times நாளிதழ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

மே 11 குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த சில வாரங்களில் அது அமுலுக்கு வரும் என, மலேசிய அரசின் உயரதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

டீசல் விலை உயர்வுக்குப் பிறகு, பெட்ரோலின் சில்லறை விலையும் கட்டங்கட்டமாக உயர்த்தப்படும் என்று The Straight Times கூறியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!