Latestசினிமா

அன்னபூரணி திரைப்படம் ; இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா மன்னிப்புக் கோரினார்

புதுடெல்லி, ஜனவரி 19 – “அன்னப்பூரணி : உணவின் தெய்வம்” திரைப்படத்தில் இராமரை அவமரியாதை செய்ததாகவும், மதம் மாற தூண்டும் “லவ் ஜிகாத்தை” விளம்பரப்படுத்தியதாகவும் எழுந்த விமர்சனங்களால் சர்ச்சையில் சிக்கிய நடிகை நயன்தாரா, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ள ஓர் அறிக்கையில்; “எனது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகி இருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

அன்னபூரணி திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்கு மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி படத்தை உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள், எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதை உணர்கிறோம்.

தணிக்கை குழுவினரால் அங்கீகாரம் வழங்கப்பட்டு திரையரங்குகளில் வெளியான ஒரு படம், நெட்பிலிக்ஸ் OTT தளத்திலிருந்து நீக்கப்பட்டது, நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கொஞ்சமும் இல்லை.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் முதலாம் தேதி, திரையரங்குகளில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

எனினும், டிசம்பர் 29-ஆம் தேதி, நெட்பிலிக்ஸில் வெளியிடப்பட்டவுடன் அந்த திரைப்படத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததோடு, போலீஸ் புகார்களும் செய்யப்பட்டன. அதோடு அத்திரைப்படம், OTT தளத்திலிருந்தும் நீக்கப்பட்டது.

அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், இதுபோன்ற சர்ச்சைகள் வேண்டுமென்றே தூண்டப்பட்டுள்ளதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!