கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 விளையாட்டாளர்களின் உடைகளைப் பற்றி விமர்சனம் செய்வதை மலேசியர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர்கள் அணியும் விளையாட்டு உடைகள் குறித்து இனியும் தொந்தரவு செய்யாதீர்கள் என அவர் சொன்னார்.
அவர்கள் என்ன அணிய வேண்டும், எப்படி அணிய வேண்டுமென்ற உங்கள் கருத்துகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்;
அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு நோக்கம் தான்; விளையாட்டில் சிறந்து விளங்கி நாட்டுக்குப் பெருமைச் சேர்ப்பதே என தனது facebook பதிவில் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தேசிய முக்குளிப்பு வீராங்கனை நூர் டபித்தா சப்ரியின் (Nur Dhabitah Sabri) படத்தை எடிட் செய்த தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அவரின் கணவர் கூறியுள்ளதாக சௌவுத் சைனா மோர்னிங் போஸ்ட் (South China Morning Post) நாளேடு முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
அச்செய்தியை தனது facebook பக்கத்தில் பகிர்ந்து ஹானா இயோ அவ்வாறு சொன்னார்.
நாட்டுக்குப் பெருமைச் சேர்க்கும் விளையாட்டாளர்களின் ஆடைகள் குறித்து அவ்வப்போது குறிப்பிட்ட சிலரால் விரும்பத்தகாத கருத்துகள் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் தக்க பதிலடியாக அமைச்சர் ஹானா இயோ வலுவான கருத்தைப் பதிவுச் செய்துள்ளார்.