
ஈப்போ, ஆகஸ்ட்டு 22 – தனது கணவர் திருந்தி விட்டதை உறுதிச் செய்ய அல்லது அதே குற்றத்தை மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்காக, வேண்டுமென்றே போலீஸ் புகார் செய்து “விளையாட வேண்டாம்” வேண்டாம் என, இந்திய பெண் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் இன்று அறிவுறுத்தினார்.
38 வயது ஜி. கணேசனுக்கு எதிரான குற்றவியல் அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில், அவரது மனைவியான 36 வயது எஸ்.பிரேம்லதா என்பவரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெசிகா டெய்மிஸ் அந்த அறிவுரையை வழங்கினார்.
போலீஸ் புகார் விளையாடுவதற்கு அல்ல. கணவரை படிய வைப்பதற்காக அல்லது அவர் திருந்தி விட்டாரா என்பதை பரிசோதிப்பதற்காக போலீஸ் புகார் செய்ய முடியாது என ஜெசிகா குறிப்பிட்டார்.
முன்னதாக, இரு பிள்ளைகளுக்கு தந்தையான கணேசன், தமக்கு எதிராக சுமத்தப்பட்ட மிரட்டல் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
இம்மாதம் ஏழாம் தேதி, செமோர், மாலை மணி 7.30 வாக்கில், தாமான் இடாமான் செமோரிலுள்ள, வீடொன்றில், பிரேம்லதாவுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டுமெனும் நோக்கத்தில் அவரை மிரட்டியதாக, கணேசன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
மூவாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும், கணேசனை விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கு விசாரணை செப்டம்பர் 19-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.