புத்ராஜெயா, அக்டோபர்-7 – கோலாலம்பூர் மலூரியில் 21 வங்காளதேசிகள் கைதாகியிருப்பதை அடுத்து, விளையாட்டு வீரர்கள் போர்வையில் வெளிநாட்டவர்களை இந்நாட்டுக்குள் கடத்தி வந்த கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
21 முதல் 33 வயதிலான அவர்கள் அனைவரும் கடந்த வியாழக்கிழமை கைதாகினர்.
தற்காலிக வேலை பெர்மிட்டைப் பயன்படுத்தி, அக்கும்பலை இயக்கி வந்த மூன்று ஆடவர்களும் அவர்களில் அடங்குவர்.
அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக, வரும் போதே அனைவரையும் விளையாட்டு உடையில் அழைத்து வருவது, போலியென நம்பப்படும் போட்டிக்கான அழைப்பிதழ் மற்றும் அட்டவணையை உடன் கொண்டு வருவது என படு சாமர்த்தியமாக அக்கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
அப்படி கள்ளத்தனமாக அழைத்து வர, ஒரு தலைக்கு இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ரிங்கிட் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது.
கைதான அனைவரும் நெகிரி செம்பிலான், லெங்கேங் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விசாரணைக்கு உதவுவதற்காக இரு உள்ளூர் ஆடவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.