Latestஇந்தியாசினிமா

விவேக்கின் நடிப்பும் சமூக நற்பணிகளும் என்றும் நினைவுகூரப்படும்; டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 18 –  கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பின் வழி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக், அகால மரணமடைந்த செய்தி உலகம் எங்கும் உள்ள தமிழர்களைப் போன்று  தமக்கும்  மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்திருப்பதாக , மஇகா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், அவரின் கோடிக்கணக்கான இரசிகர்களுக்கும் மஇகா சார்பிலும், மலேசியத் தமிழர்கள் சார்பிலும்,  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
விவேக் தனது நடிப்புத் தொழிலுடன் இரசிகர்கள் , உலகத் தமிழர்கள் ஆகியோர் மத்தியில்  நன்மதிப்பினையும் கொண்டுள்ளார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.இராதா போன்ற மாபெரும் கலைஞர்களுக்குப் பின்னர் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிப்போடு சேர்த்து,  மூட நம்பிக்கைகளையும், காலத்துக்கு ஒத்து வராத வழக்கங்களையும் சாடியவர் விவேக்.
தொடர்ச்சியாக அவரின் அந்த அணுகுமுறையை இரசிகர்கள் கொண்டாடினர். பாராட்டினர். “சின்னக் கலைவாணர்” என பட்டமளித்து மகிழ்ந்தனர்.
அதுமட்டுமல்ல! மறைந்த இந்திய அதிபர் அப்துல் கலாம் அவர்களை விவேக் சந்தித்தபோது அவர் மிகச் சாதாரணமாக “ஒரு மில்லியன் மரங்களை நடுங்கள்” என இட்ட வேண்டுகோளை, தலைமேல் ஏற்று காலமெல்லாம் அதற்கெல்லாம் பாடுபட்டார் விவேக்.
பத்து இலட்சம் மரக் கன்றுகள் நடும் இலக்கை அடைந்த பின்னரும் “தொடர்ந்து இந்தப் பணியைச் செய்யுங்கள்” என அப்துல் கலாம் கேட்டுக் கொண்டதற்காக, அப்துல் கலாம் மறைந்த பின்னரும் தனது மரம் நடும் பணியைத் தொடர்ந்தார் விவேக்.
59-வது வயதில் மறைந்து விட்டாலும் தன் வாழ்நாளில் 3.3 மில்லியனுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு இலக்கணமாகத் திகழ்ந்தவர் விவேக்.
வாழ்க்கையில் எதைச் சாதிக்க வேண்டும் என மற்ற மனிதர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் விவேக். அவரது நடிப்புக்காகவும்,  நண்பணிகளுக்காகவும் என்றும் நினைவுகூரப்படுவார் என டான் ஶ்ரீ எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!