கோலாலம்பூர். பிப் 11 – வாடகைக்கு பணம் கட்ட முடியாமல் மனைவி குழந்தைகளுடன் காரிலேயே தங்கியிருக்கும் அவல நிலை மலேசியாவில் இன்னமும் நிலவுகின்றது என்பது நம்மை வேதனையுற வைக்கிறது.
ஆனால், கோவிட் தாக்கத்தினால் இதுபோன்ற பரீதாப சூழலுக்கு தள்ளப்பட்டவர்கள் ஏராளம்.
பூச்சோங்கைச் சேர்ந்த இந்திய தம்பதியர் , 6 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளுடன் 3 மாத கைக்குழந்தையும் என 3 பிள்ளைகளுடன் கடந்த ஒரு மாத காலமாக காரிலேயே தங்கி வந்த விபரத்தை அண்மையில், சமூக ஊடகங்களின் வழி அறிந்திருப்போம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தலைவர், பாதுகாவலராக வேலை செய்து வந்த இடத்தில் , சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டதால், வாடகைக்கு இருந்த வீட்டிலிருந்து இக்குடும்ம்பத்தினர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது இவர்கள் Uncle Kentang தொண்டூழிய அமைப்பின் உதவியுடன் , தங்கும் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களின் உதவிக்கரமும் கிடைக்கப்பெற்று வருகிறது.
தற்போது, இக்குடும்பத்தின் தலைவருக்கு வேலையும், அவரது பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிக்கூட வசதி உள்ள இடத்தில் வாடகை வீட்டையும் தேடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கி வந்த கார், அவர்களின் நண்பரிடமிருந்து நாள் கணக்கில் வாடகைக்கு எடுத்ததாகும். அதை அவர்கள் திருப்பி கொடுத்தாக வேண்டும். எனவே, அவர்களுக்கு மேலும் உதவ விரும்புவர்கள் Uncle Kentang தொண்டூழிய அமைப்பை தொடர்புக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.