ஜோகூர் பாரு, செப்டம்பர் 2 – ஜோகூரில் வீடுகளை உடைத்துத் திருடுவது, வழிப்பறி கொள்ளை என ஈடுபட்டு வந்த பாலா கும்பலின் நடவடிக்கையை காவல்துறை முறியடித்துள்ளது.
20-லிருந்து 65 வயதான 9 ஆடவர்கள், 2 பெண்கள் உட்பட 11 பேர், கடந்த மாதம் கைது செய்யப்பட்டதன் வழியாக அந்நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டதாக ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.
இக்கும்பல் கூலாய் (Kulai), பொன்தியான் (Pontian), மூவார் (Muar) ஆகிய மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக, வேலி மற்றும் பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகள் அல்லது ஆடம்பர வீடுகளை இந்தக் குழு குறிவைக்கிறது என அவர் கூறினார்.
இரவில் அல்லது அதிகாலையில், வீட்டுக்குள் நுழைவதற்காக ஆட்டு நகங்கள் மற்றும் உலோக கட்டர்களை (cutter) பயன்படுத்தி ‘ஸ்லைடிங்’ (sliding) கதவைத் திறந்து திருடும் முறையை இக்கும்பல் கையாண்டு வந்துள்ளது.
ஒருவேளை, வீட்டில் ஆட்கள் இருந்தால் ஆயுதங்களைக் கொண்டும் கொள்ளையடிப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.