உலு கிள்ளான், ஏப்ரல் 30 – சிலாங்கூர், உலு பெர்னாமிலுள்ள, வீடொன்றில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், ஐந்து உள்நாட்டு ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 2.4 கிலோகிராம் எடை கொண்ட அல்லது சுமார் எட்டாயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள மூன்று கஞ்சா கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்றிரவு மணி 10.50 வாக்கில், 21 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஐவரும் கைதுச் செய்யப்பட்டதை, உலு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் பைசால் தாரிம் உறுதிப்படுத்தினார்.
அவர்கள் கைதுச் செய்யப்பட்ட வீட்டின் கூரையிலிருந்து 1.7 கிலோகிராம் எடையிலான இரு கஞ்சா கட்டிகளும், துணி அலமாரியிலிருந்து 0.77 கிலோகிராம் எடையிலான கஞ்சா கட்டியும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கை வாயிலாக, உலு கிள்ளான் வட்டாரத்தில் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் “கெங் பாப்” கும்பலின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக, பைசால் சொன்னார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உலு கிள்ளான் மற்றும் உலு பெர்னாம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விநியோகிக்க ஏதுவாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தவை எனவும், குறைந்தது ஐயாயிரம் போதைப் பித்தர்களுக்கு அவற்றை விநியோகிக்க முடியும் எனவும் நம்பப்படுகிறது.
கைதுச் செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையோடு, 15 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.