அம்பாங் ஜெயா, நவம்பர்-17 – சிலாங்கூர் அம்பாங் ஜெயா, பாண்டான் இண்டாவில்
பக்கத்து வீட்டின் முன்புறம் காரை நிறுத்தியதால் இரு வீட்டுக்கும் இடையில் வெடித்த பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
புகார்தாரரின் மனைவி பக்கத்து வீட்டின் முன்புறம் காரை நிறுத்தியதால் நவம்பர் 8-ம் தேதி, இரவு 8.40 மணியளவில் தாமான் அம்பாங் ஹிலிரில் உள்ள வீட்டில் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மனைவியுடன் வந்து பிரச்னை செய்த 32 வயது சந்தேக நபர், திடீரென வீட்டுக்குள் சென்று கத்தியைக் கொண்டு வந்து நீட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டு தம்பதி போலீசில் புகார் செய்தது.
தனியார் நிறுவனமொன்றின் குமாஸ்தாவான சந்தேக நபர் நவம்பர் 11-ல் கைதாகி வெள்ளிக்கிழமை அம்பாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
கொலை மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டவருக்கு 3,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.