கோலாலம்பூர், பிப் 17 – ‘டான்ஶ்ரீ’ பட்டம் கொண்ட நபரால் கடந்த 12 ஆண்டுகளாக வருமானம் செலுத்தப்படாமல் இருந்த இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்ணுக்கு இறுதியாக மொத்த சம்பளப் பணம் கிடைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட முதலாளிக்கும் கோலாலம்பூர் இந்தோனேசிய தூதரகத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் , அந்த இந்தோனேசிய பெண்ணுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சம்பளம் பணம் கொடுக்கப்பட்டது.
70 வயது மதிக்கத்தக்க டான் ஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவரது வீட்டில், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்து வந்ததோடு, பல்வேறு இழிச்சொற்களுக்கும் ஆளாகி வந்ததை அடுத்து, அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சம்பந்தப்பட்ட இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண் , தான் வேலை செய்த வீட்டிலிருந்து தப்பியோடினார்.
அதன் பின்னர் ஒராண்டுக்கும் மேலாக அவர் இந்தோனேசிய தூதரகத்திடம் அடைக்கலம் பெற்றிருந்தார். தற்போது, சம்பள பணத்துடன், மிகுந்த மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு தான் திரும்பி செல்லவிருப்பதாக, பாதிக்கப்பட்ட அந்த இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண் கூறியுள்ளார் .