
குளுவாங், ஜன 12 – காட்டு யானைகளின் நடமாட்டத்தால், ஜோகூர், குளுவாங், Taman Perdana குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஏறக்குறைய 2,000 பேர் அச்சத்தால் உறைந்திருக்கின்றனர்.
நேற்றிரவு அக்குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடொன்றின் வேலிக் கதவை நொறுக்கி, உள்ளே தாய் யானையும் குட்டி யானையும் புகுந்து அட்டகாசம் செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருக்கின்றது.
அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 83 வயது பாவாயி அம்மா, இரவு மணி ஒன்பதரை வாக்கில், வீட்டின் முன் பெரும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.
வீட்டு வேலிக்கதவை உடைத்து உள்ளே நுழைந்த அந்த யானைகள் பின்னர், தனது வீட்டின் பின்புறம் இருக்கும் செம்பனை தோட்டத்துக்குள் நுழைந்து மறைந்து விட்டதாக, தனது அச்சம் கலந்த அனுபவத்தை பாவாயி பகிர்ந்து கொண்டார்.
இவ்வேளையில், அந்த இரு யானைகளும், ஐந்து யானைகள் கொண்ட கூட்டத்திலிருந்து வழி தவறி , மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததாக ஜோகூர் மாநில வனவிலங்கு துறையின் இயக்குநர் Aminuddin Jamin தெரிவித்தார்.