கோலாலம்பூர், ஏப்ரல்-17, எல் நினோ பருவ நிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை 35 பாகை செல்சியசுக்கு மேல் போகும் சமயங்களிலும் விடாப்பிடியாக வெளிப்புற நடவடிக்கைகளை நடத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது, பெற்றோர்கள் புகாரளிக்கலாம்.
SISPAA எனப்படும் பொது புகார் நிர்வாக முறை வாயிலாக பெற்றோர்கள் முறைப்படி புகார் செய்யலாம் என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 35 பாகை செல்சியசைத் தாண்டினால், வகுப்பறைக்கு வெளியே எந்தவொரு நடவடிக்கையையும் நடத்தக் கூடாது என பள்ளிகளுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு விட்டது.
அதனைப் பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்பாகப் பின்பற்றியாக வேண்டும் என ஃபாட்லீனா சொன்னார்.
வெப்பம் இன்னும் தணியாத சூழ்நிலையில் திரங்கானுவில் உள்ள பள்ளியொன்றில் இவ்வாரம் குறுக்கோட்டப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, பெற்றோர்களைக் கவலையடையச் செய்திருப்பதாகக் கூறி தகவல்கள் வைரலானது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
அது குறித்து அதிகாரப்பூர்வ புகார் எதனையும் தமது தரப்பு இன்னும் பெறவில்லை என்றார் அவர்.
அப்படி புகார்கள் வந்தால், அவை அடிப்படையானவையா இல்லையா என்பது குறித்து நிச்சயம் விசாரிக்கப்படுமென ஃபாட்லீனா உறுதியளித்தார்.
எல் நினோவின் தாக்கம் தொடரும் வரை, மாணவர்களின் பாதுகாப்புக் கருதி வகுப்பறைகளுக்கு வெளியிலான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என அவர் சொன்னார்.