கோலாலம்பூர், செப்டம்பர்-3 – வருமான வரி செலுத்துவோர், வெளிநாடுகளுக்குச் செல்லும் முன்பாகவே பயணத் தடை குறித்த தங்களின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வரி பாக்கி வைத்திருந்து, விமான நிலையத்திலிருந்து கடைசி நேரத்தில் திருப்பி அனுப்படுவதைத் தவிர்க்க அது அவசியமென, LHDN எனப்படும் உள்நாட்டு வருமான வரி வாரியம் கூறியது.
எனவே, LHDN தரவுத் தளத்தில் தங்களின் சுய விவரங்களையும் மற்ற தகவல்களையும் அவ்வப்போது புதுப்பித்து வருவதை, வரி செலுத்துநர்கள் பழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
அப்போது தான், வரி பாக்கி குறித்தோ அல்லது பயணத் தடை குறித்தோ நினைவூட்டல்களை விடுக்க LHDN-னுக்கு வசதியாக இருக்கும்.
ஆனால், வருமான வரி செலுத்துநர்கள் அவ்வாறு செய்வதில்லை என்பது தான் பிரச்னையே என, LHDN-னின் பொது உறவு அதிகாரி Azharuddin Mohd Ali தெரிவித்தார்.
வருமான வரி நிலுவையில் உள்ளோருக்கு எதிராக LHDN கடைசியாக எடுக்கும் ஆயுதம் தான் பயணத் தடை என அவர் சுட்டிக் காட்டினார்.
வரி பாக்கியை மொத்தமாகச் செலுத்தினால், பயணத் தடை உடனடியாக நீக்கப்படும்.
இயலாதவர்கள், LHDN-னுடன் பேசி தவணைப் பணமாகச் செலுத்தி வரவும் வாய்ப்புண்டு என்றார் அவர்.