ஷா ஆலாம், ஆகஸ்ட்-16, கடந்தாண்டு சிலாங்கூர், ஷா ஆலாமில் 10 பேர் உயிரிழக்கக் காரணமான எல்மினா விமான விபத்து தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், விபத்துக்கு முதன்மைக் காரணமாக புரோட்டோகோல் பிரச்னை (protocol issues) கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது விமானத்தைத் தரையிறக்குவதற்கு முன்பான பரிசோதனையின் போது விமானி தவறுதலாக ‘lift dump spoiler’ பட்டனை அழுத்தியிருக்கிறார்.
கட்டுப்படுத்தப்பட்ட வழியில் airfoil-லின் lift கூறுகளை குறைக்கும் spoiler-கள் பெரும்பாலும் விமான இறக்கையின் மேற்பரப்பிலிருக்கும் தட்டுகளாகும்.
இவ்வேளையில், விமானப் பணியாளர்களுக்கான இருக்கைகளின் வரிசையும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டியைப் பின்பற்றவில்லை.
விதிமுறைகளுக்கு எதிராக முதன்மை விமானி வலது இருக்கையிலும், துணை விமானி இடப்பக்க இருக்கையிலும் அமர்ந்திருந்ததை விசாரணை அறிக்கைச் சுட்டிக் காட்டியது.
இப்படி இடம் மாறி உட்கார்ந்த காரணத்தால் தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
விமானப் பணியாளர்களின் மேலாண்மையிலும் பலவீனம் நிலவியுள்ளது.
அவர்களுக்குப் போதியப் பயிற்சியும் இல்லை; வரப்போகும் ஆபத்தைக் கண்டறியும் ஆற்றலும் அவர்களுக்குப் போதவில்லை.
ஆக, விமானப் பயணத்தில் கட்டுப்பாடு இழப்பு (LOC-I) என அவ்விபத்தை விசாரணை அறிக்கை வகைப்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவ்விமானம், சுபாங் விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் எல்மினாவில் விழுந்து நொறுங்கியது.
அதில், 6 பயணிகள், 2 பணியாளர்கள், ஒரு e-hailing ஓட்டுநர், ஒரு p-hailing ஓட்டுநர் என 10 பேர் கொல்லப்பட்டனர்.