உலு சிலாங்கூர், மே-5, சிலாங்கூர், குவாலா குபு பாரு இந்திய வாக்காளர்கள் வெளியாரின் பேச்சில் மயங்காமல் வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும்.
ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அவ்வாறுக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சில அரசியல்வாதிகள் உள்ளூர் மக்களின் நலனை யோசிக்காமல் அவர்கள் பாட்டுக்கு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவர்.
அவர்களின் பேச்சை நம்பி ஒற்றுமை அரசாங்க வேட்பாளருக்கு வாக்களிக்காமல், அக்கூட்டணி தோல்விக் கண்டால், கடைசியில் நட்டம் ஏற்படப் போவது என்னவோ உள்ளூர்வாசிகளுக்குத் தான் என விக்னேஸ்வரன் நினைவுறுத்தினார்.
குறிப்பாக, கடந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட DAP மூத்த தலைவர் ஒருவர், அந்த ஆத்திரத்தில் அக்கட்சிக்கு எதிராக KKB-யில் பிரச்சாரத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்; அவரின் பேச்சை நம்பி மோசம் போகாதீர்கள் என விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
குவாலா குபு பாருவில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைகளைக் களைய,
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் Pang Sock Tao-வின் வெற்றியை உறுதிச் செய்வது அவசியமாகும்.
எஞ்சிய மூன்றாண்டுகளில் முடிந்தவரை எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வுக் காண ஆளும் கூட்டணிக்கு தொகுதி மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.
அதன் பிறகும் பிரச்னை நீடித்தால், மக்கள் அப்போது முடிவு செய்துக் கொள்ளலாம் என குவாலா குபு பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ம.இ.கா நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட பிறகு மேலவையின் முன்னாள் தலைவருமான தான் ஸ்ரீ விக்கி கூறினார்.
தற்போது உரிமை என்ற புதியக் கட்சிக்குத் தலைமையேற்றுள்ள பினாங்கு மாநில முன்னாள் துணை முதல் அமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி, KKB இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பக்காத்தானைப் புறக்கணிக்க வேண்டும் என தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
2023 ஆகஸ்டில் நடைபெற்ற பினாங்கு மாநில தேர்தலில் தாம் மீண்டும் வேட்பாளராகத் தேர்வுச் செய்யப்படாத காரணத்தால் டாக்டர் ராமசாமி DAP-யில் இருந்து வெளியேறினார்.
மே-11 சனிக்கிழமை நடைபெறும் KKB சட்டமன்ற இடைத்தேர்தலில் PH, PN, PRM மற்றும் சுயேட்சை என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.