கோலாலம்பூர், நவம்பர்-28, வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளின் பேரிடர் கேந்திரங்களின் ஒருங்கிணைப்பு முழு தயார் நிலையில் இருப்பதை உறுதிச் செய்யுமாறு, தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான NADMA உத்தரவிடப்பட்டுள்ளது.
நவம்பரில் தொடங்கிய பருவமழைக் காலம் மார்ச் வரையில் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் காக்க அது அவசியமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்களுக்கு அரசாங்கம் உச்சக்கட்ட முன்னுரிமையை வழங்குமென்றும், மக்களவையில் பிரதமருக்கான இன்றையக் கேள்வி நேரத்தின் போது டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
வெள்ளத் தயார் நிலை கடந்தாண்டை விட இவ்வாண்டு மேலும் சிறப்பாக உள்ளது.
அதற்காக, தேசியப் பேரிடர் நிர்வாகச் செயற்குழுவின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட்ஹமிடி, NADMA மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பிரதமர் நன்றித் தெரிவித்தார்.
இன்று நண்பகல் 12 மணி வரைக்குமான நிலவரப்படி, 6 மாநிலங்களில் மொத்தமாக 41,135 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக மோசமாக கிளந்தானில் 33,987 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திரங்கானுவில் 6,453 பாதிக்கப்பட்ட வேளை, கெடாவிலும் நிலைமை மோசமாகி வருகிறது.
அங்கு இன்று காலை 200-க்கும் குறைவானவர்களே நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில் தற்போது அவ்வெண்ணிக்கை 452 பேராக அதிகரித்துள்ளது.
பெர்லிசிஸ் 195 பேரும், ஜோகூர், பேராக் மாநிலங்களில் முறையே 28 மற்றும் 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.