
கோலாலம்பூர், அக் 12 – நவம்பர் மாதம் தொடங்குவதற்கு முன் நாட்டில் மோசமான வெள்ளம் ஏற்படாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து, நாடாளுமன்றத்தை கலைக்க பேரரசர் அனுமதி வழங்கினார். வெள்ளம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள, பராமரிப்பு அரசாங்கம் இருப்பதை முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக் காட்டினார்.
நவம்பர் மாதம் நடுப்பகுதியில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ள வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாகவே, தேர்தல் ஆணையம் நாட்டின் 15-வது பொதுத் தேர்தலை நடத்துமென பேரரசர் நம்புகிறார். வெள்ளம் ஏற்பட்டால், அதனை எதிர்கொண்டு செயல்பட அரசாங்கம் இருப்பது தான் முக்கியமென டத்தோ ஸ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் மட்டும்தான் கலைக்கப்பட்டுள்ளது. மாறாக, பேரிடர் நிர்வாக நிறுவனம், சமூகநல துறை, சுகாதார அமைச்சு, தீயணைப்பு மீட்பு துறை ஆகியவை வெள்ளத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார். தமது பேஸ்புக் சமூக அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவு ஒன்றின் வாயிலாக டத்தோ ஸ்ரீ நஜிப் அவ்வாறு சொன்னார்.
எனினும், சம்பந்தப்பட்ட பதிவை அவர் சொந்தமாக பதிவேற்றம் செய்தாரா அல்லது அவரது உதவியாளர்கள் அதனை பதிவேற்றம் செய்தனரா என்பது தெரியவில்லை. இதனிடையே, வெள்ளத்தின் போது பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து பேரரசர் அதிருப்தி தெரிவிக்கவில்லை. பிரதமருக்கு தெரியாமல், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 12 அமைச்சர்கள் தமக்கு கடிதம் எழுதியது குறித்தே அவர் அதிருப்தி கொண்டிருப்பதாக, டத்தோ ஸ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டதால் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கூறிய டான் ஸ்ரீ முஹிடின், பின்னர் தேர்தல் நடத்தக்கூடாது என கோரி வருவதும் பேரரசரை அதிருப்தி அடைய செய்துள்ளது.