வாஷிங்டன், மே 6 – அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, வெள்ளை மாளிகையின் நுழைவாயில்களில் ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உள்நாட்டு நேரப்படி, கடந்த சனிக்கிழமை, மே நான்காம் தேதி, இரவு மணி 10.30 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததாக, அமெரிக்க இரகசிய சேவை துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மிகவும் வேகமாக வந்த அந்த வாகனம், வெள்ளை மாளிகையின் நுழைவாயில்களின் ஒன்றின் மதில் சுவரை மோதித் தள்ளியது. எனினும், அச்சம்பவத்தால் வெள்ளை மாளிகைக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என தனது X சமூக ஊடக பதிவு வாயிலாக, அமெரிக்க இரகசிய சேவை துறை கூறியுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனம் முழுமையாக சோதனையிடப்பட்டு, பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டதையும் அது உறுதிப்படுத்தியுள்ளது.
அவ்விபத்தை தொடர்ந்து, தற்காலிகமாக மூடப்பட்ட அப்பகுதி பின்னர் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.