
கோலாலம்பூர், மார்ச்-5 – பள்ளிகளில் vape அல்லது மின்னியல் சிகரெட்டுகளைப் புகைக்கும் மாணவர்கள், அதே தவற்றை மீண்டும் மீண்டும் புரியும் பட்சத்தில், 14 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படலாம்;
அல்லது ஒரேடியாக பள்ளியை விட்டே நீக்கப்படலாம்.
பள்ளிகளில் vape புகைக்கும் பழக்கத்தை வேரறுக்க அமைச்சு மேற்கொள்ளும் கடுமையான கட்டொழுங்கு நடவடிக்கை அதுவென, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் தெரிவித்தார்.
முதன் முறையாக சிக்கும் போது மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்படும்; பின்னர் பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு ஆலோசகச் சேவை வழங்கப்படும்.
மீண்டும் அத்தவற்றைப் புரிய மாட்டேன் என உறுதிக் கடிதத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.
அதன் பிறகும் திருந்தவில்லை என்றால், இடைநீக்கமும் முழு நீக்கமும் பாயுமென, மேலவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் ஃபாட்லீனா சொன்னார்.
எனினும், போதைப் பொருள் தடுப்புக் கல்வி போன்றத் திட்டமே, இந்த Vape கலாச்சாரத்தை முறியடிக்க சரியானதாக இருக்கும்.
அதன் மூலம் பாடத்திட்டம் மற்றும் புறப்பாட நடவடிக்கைகள் வாயிலாக மாணவர்களுக்கு vape அபாயம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படும் என்றார் அவர்.