
கோலாலம்பூர், ஆக 30 – வேப் எனப்படும் மின் சிகரெட்டை புகைக்கும் கலாச்சாரம் இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிக வேகமாக பரவி வருவது குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
வேப்பிங் எனப்படும் புதிய நாகரீக புகைக்கும் பழக்கம் எதிர்காலத்தின் கசப்பாக இருக்கும், அது தடை செய்யப்படாவிட்டால் புகைபிடிப்பதைப் போலவே அகற்றுவது கடினம் என அச்சங்கம் சுட்டிக்காட்டியது. தற்பொழுது நாட்டில் ஏறக்குறைய அதாவது 20 லட்சம் வேப் புகைப்பாளர்கள் இருக்கின்றார்கள்.
எனவே, இதை முற்றிலும் தடை செய்வது குறித்து அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார் . 13-17 வயதுடைய மலேசியப் பதின்ம வயதினர் மின்னியல் சிகரெட் மற்றும் வேப்பைப் பயன்படுத்துபவர்கள் 2017 ல் 9.8% லிருந்து 2022 ல் 14.9% ஆக உயர்ந்துள்ளது என ஆய்வு காட்டுகின்றது.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தை தளமாகக் கொண்ட தேசிய விஷ மையம், 66 வேப்பிங் தொடர்பான நச்சுத்தன்மையை புகார்களை பெற்றுள்ளது. பெரும்பாலான புகார்கள் ஒன்று முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகள், மற்றும் ஆக இளையவர் 4 மாத குழந்தையாகும்.
மின்னியல் திரவங்களை உள்ளிழுப்பதன் மூலம் நிகோடின் விஷத்தால் பாதிக்கப்பட்ட இளம் வேப்பர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மின்னியல் சிகரெட் அல்லது வேப் சாதனங்களில் உள்ள பொருட்கள், சூடுபடுத்தப்படும் போது, நுரையீரலின் புறணி மீது அழற்சி விளைவை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களை உருவாக்கும் மற்றும் மின்னியல் சிகரெட் அல்லது வேப் தயாரிப்பு பயன்பாட்டுடன் தொடர்புடைய நுரையீரல் காயத்தையும் இது ஏற்படுத்தும் என முகைதீன் தெரிவித்தார்.