
கோலாலம்பூர், ஜூன் 30 – எதிர்வரும் 15-ஆவது பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்ற தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு தயாராய் இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். எனினும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு பல வேட்பாளர்கள் இருப்பதாக பெஜூவாங் கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வேட்பாளரை இப்போதைக்கு அறிவிக்க முடியாது . அந்த வேட்பாளர் பொருத்தமாக இல்லாவிட்டால் அல்லது போட்டியிட விரும்பவில்லை என்றால் அத்தொகுதியில் தாமே போட்டியிடலாம் என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். இதனிடையே பெஜூவாங் கட்சியை நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்தும் பிரச்சாரம் நல்ல நிலையில் இருப்பதாகவும் இதற்காக நாடு முழுவதிலும் பயணம் மேற்கொள்ளும் திட்டமும் இருப்பதாக அவர் கூறினார். ஆனால் பெஜூவாங் எதிர்க்கட்சியாக இருப்பதால் ஊடகங்கள் அதனை பெரிய அளவில் செய்தியாக வெளியிடுவதில்லை என்றும் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். சபாவரை அனைத்து மாநிலங்களுக்கும் நாங்கள் சென்று வந்துவிட்டோம். ஊடகங்களில் செய்தி வரவில்லை. முன்பு பெர்சத்து கட்சியில் இருந்ததைவிட தற்போது பெஜூவாங்கில் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதாகவும் டாக்டர் மகாதீர் விவரித்தார்.