கோலாலம்பூர், பிப் 21 – நாட்டில் வேலை செய்வதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக விண்ணப்பங்கள் திறக்கப்பட்டது முதல் இதுவரை 111,807 வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து மனு பாரங்கள் பெறப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
அவர்களில் 77,848 பேர் உற்பத்தித் துறையில் வேலை செய்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். 13,119 பேர் தோட்டத் துறையிலும், சேவைத் துறையில் 10,611 பேரும் கட்டுமானத் துறையில் 8,530 பேரும், விவசாயத்துறையில் 1,699 பேரும் மனுச் செய்துள்ளனர்.
இணையத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களின் விண்ணப்பங்களை பெறுவதில் தொழில் நிர்வாகங்கள் தொடக்கத்தில் சில பிரச்சனைகளை எதிர்நோக்கியதை சரவணன் மறுக்கவில்லை.
முதல் முறையாக நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டபோது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதுதவிர தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்திக்கொள்வதற்கும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையும் சரவணன் சுட்டிக்காட்டினார்.