
கோலாலம்பூர், செப் 13 – கோலாலம்பூர் மாநகரில் இளைஞர்கள் மற்றும் வேலை தேடி வருவோர் தங்கும் வசதிக்காக தினசரி 10 ரிங்கிட் விலையில் தங்கும் விடுதி சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Y-Capsule என்ற அந்த தங்கும் விடுதி திட்டம் இந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார். 18 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் தினசரி 10 ரிங்கிட் கட்டணத்தில் தங்கக்கூடிய வகையில் அந்த தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலை தேடுவோர், தொழிற் பயிற்சியை மேற்கொள்வோர், மற்றும் வேலை கிடைத்து தங்குவதற்கு இடமின்றி இருப்பவர்களுக்கு வசதியாக தினசரி 10 ரிங்கிட் கட்டணத்தில் தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹன்னா யோ கூறினார். இந்த நடவடிக்கையினால் கிராமப்புறங்களில் இருந்து கோலாலம்பூர் மாநகருக்கு அதிகமானோர் வேலை தேடி வருவார்கள் என அவர் கூறினார்.