Latestமலேசியா

ஷாக்கிர் நாய்க்கின் உரை தேள் கொட்டுவது போல் இருப்பதாக இந்தியர்கள் – சீனர்கள் உணர்ந்தனர் நீதிமன்றத்தில் டாக்டர் ராமசாமி சாட்சியம்

கோலாலம்பூர், ஆக 25 – மூன்று ஆண்டுகளுக்கு முன் கோத்தா பாருவில் சர்ச்சைக்குரிய சமய போதனையாளர் ஷாக்கீர் நாய்க் ஆற்றிய உரை தேள் கொட்டியது போன்று இருந்ததை இந்தியர்களும் சீனர்களும் உணர்ந்ததாக பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி தெரிவித்தார். மலேசியர்களில் பெரும்பாலானோருக்கு அவரது உரை சினத்தை ஏற்படுத்தியதோடு அதனை பலர் கடுமையாக குறைகூறியதாகவும் ராமசாமி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். மலேசிய இந்துக்கள் மலேசிய பிரதமரைவிட இந்திய பிரதமருக்குத்தான் ஆதரவாக இருக்கின்றனர். அவர்கள் மலேசியர்களாக இருப்பதைவிட இந்தியர்களாக தங்களை காட்டிக்கொள்வதில்தான் ஆர்வமாக இருக்கின்றனர் என்றும் சீனர்களை குடியேறிகள் என்றும் ஷாக்கீர் நாய்க் கூறியதும் மலேசியர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததாகவும் ராமசாமி தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

இதனால் அவர் உடனடியாக மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதோடு அவர் பொதுமக்களிடையே உரையாற்றுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்ததாக தமக்கு எதிராக ஷாக்கீர் நாய்க் தொடுத்துள்ள அவதூறு வழக்கு தொடர்பில் சாட்சியம் அளித்தபோது ராமசாமி விவரித்தார். அவரது உரை மலேசிய சீனர்கள் மத்தியில் செய்தியாக வெளியிடப்பட்டதோடு அதனை ஊடகங்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக சாடியதையும் ராமசாமி கூறினார்.

ஷாக்கீர் நாய்க் Pendatang அல்லது குடியேறிகள் என்ற வார்த்தையை கையில் எடுத்திருப்பதோடு தாம் இந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன் சீனர்கள் வெளியேற வேண்டும் என ஷாக்கீர் கூறியிருந்ததாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி The star பத்திரிகை வெளிட்டிருந்த செய்தியையும் ராமசாமி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். மலேசியாவில் மற்ற இனத்தவர்கள் மலாய்க்காரரகள், சீனர்கள் அல்லது இந்தியர்களாக இருந்தாலும் Pendatang என்று சொல்வது இழிவான வார்த்தையாகும். உரிமையுள்ள மற்றொரு மலேசியரின் குடிநுழைவு மற்றும் விசுவாசம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருப்பது தேவையற்ற ஒன்றாகும் என டாக்டர் ராமசாமி தமது சாட்சியத்தில் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை தொடரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!