
கோலாலம்பூர், செப்டம்பர் 8 – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.
அவரது “ஜவான்” ஆக்ஷன் ட்ரிலர் திரைபடம், திரைக்கு வந்த முதல் நாளே 74 கோடியே 80 லட்சம் ரிங்கிட்டைக் குவித்து, வசூல் சாதனையைப் பதிவுச் செய்துள்ளது.
அதன் வாயிலாக, எட்டு மாதங்களுக்கு முன், கடந்த ஜனவரியில் திரைக்கு வந்து 69 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை வசூலித்த அவரது “பதான்” திரைப்படத்தை ஜவான் பின்னுக்கு தள்ளியது.
அதோடு, ஹிந்தி திரையுலகில் மிகப் பெரிய ஓப்பனிங் முதல் நாள் வசூலைக் குவித்த முதல் திரைப்படம் எனும் பெருமையையும் அது பெற்றுள்ளது.
குறிப்பாக, ஹிந்தி பதிப்பிலிருந்து சுமாராக 64 கோடியே 90 லட்சம் ரிங்கிட் வசூலிக்கப்பட்ட வேளை ; எஞ்சிய ஒன்பது கோடியே 80 லட்சம் ரிங்கிட் டப்பிங் செய்யப்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளிலிருந்து பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜவான் திரைக்கு வந்த முதல் நாளான நேற்று, இந்தியா முழுவதுமுள்ள திரையரங்குகளுக்கு வெளியே லட்சக்கணக்கான இரசிகர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளதால், ஜவான் வசூல் சாதனை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இவ்வேளையில், ஜவான் வசூல் சாதனைக்கு வித்திட்டு இரசிகர்களுக்கு ஷாருக்கான் தனது X சமூக ஊடகம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
ஷாருக்கானின் மனைவி கெளரி கான் தயாரிப்பில், பிரபல தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரான அட்லீ இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபது உட்பட தென்னிந்திய நடிகர்கள் நடித்துள்ள ஜவான் திரைப்படம், இதுவரை உலகம் முழுவதும் முன்பதிவு வாயிலாக இரண்டு கோடியே 80 லட்சம் ரிங்கிட்டை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது