
கிள்ளான், ஏப் 30- ஷா ஆலம் நற்பணி மற்றும் சமூகநல மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற நல்லெண்ண விருந்து நிகழ்வில் மூன்று இளம் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். நுறு திருக்குறள்களை 8 நிமிடம் 39 விநாடிகளில் ஒப்பிவித்து செல்வாக்குமிக்க உலகச் சாதனை விருதை வென்ற மாணவி தாரணி பிரகாஷ், அனைத்துலக கராத்தே போட்டிகளில் பல வெற்றிகளை ஈட்டி அளப்பரிய சாதனைகளைப் புரிந்த ஷாமளராணி சந்திரன் மற்றும் ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் இளம் விளம்பரத் தராகவும் அதிகளவில் உலகச் சாதனை முயற்சிகளை மேற்கொண்ட மற்றும் சாதனையைப் புரிந்த சர்வேஸ்வரன் யோகேஸ்வரன் ஆகியோரே அந்த மூன்று இளம் சாதனையாளர்களாவர்.
இந்த விருந்து நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் முன்னிலையில் இந்த சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு தலா 500 வெள்ளி பரிசு, நற்சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கம்போடிய சீ போட்டிக்கு தயாராகிவரும் ஷாமளா ராணியின் தற்போது மலாக்காவில் பயிற்சியை மேற்கொண்டு வருவதால் அவரது தாயார் திருமதி உமாராணி சந்திரன் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை பெற்றுக்கொண்டார்.